மட்டக்களப்பு காத்தான்குடி குண்டு தாக்குதலுக்கான எதுவிதமான தடயங்களும் இல்லாத நிலையில், இது குண்டுதாக்குதல்தானா எனக் கண்டறிய முடியாது குழப்பம் .

 


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடு ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பாவிக்கப்பட்ட குண்டு தொடர்பில் பல ஊகங்ளைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

புதுவகையான இந்த ரகம் உள்ளூரில் தயாரிக்கப்பட்டது. எனினும் அதன்வகை தெரியவில்லை. இப்போது நடத்தப்பட்ட தாக்குதல் அதனைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கானதா என்றெல்லாம் என பல கோணங்களில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூநொச்சிமுனை முகைதீன் ஜூம்ஆஹ பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றின் கூரை மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்து தீ பிளம்பு வெளியேறியதையடுத்து வீட்டின் அறைப் பகுதியிலுள்ள இரு ஓடுகள் உடைந்து கீழே வீழ்ந்துள்ளன.

ஆனால் வீட்டில் இருந்த எவருக்கும் எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட புகை மணத்தினால் பெண் ஒருவர் வாந்தி எடுத்துள்ளார். குண்டு வெடிப்பால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இருந்தபோதும் குண்டுத் தாக்குதலுக்கான எதுவிதமான தடயங்களும் இல்லாத நிலையில், இது குண்டுதாக்குதல்தானா எனக் கண்டறிய முடியாது குழப்பமடைந்தனர்.