தமிழ் மக்களின் ஒன்றிணைந்த தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் அமைவார்!




(மட்டக்களப்பு நிருபர்)



தமிழ் மக்களின் ஒன்றிணைந்த தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் அமைவார் என அரசியல் ஆய்வாளரும்,தமிழ் மக்கள் பொதுச்சபை உறுப்பினருமான ம.நிலாந்தன் தெரிவித்தார்.

இன்றைய சூழலில் தமிழ்ப் பொது வேட்பாளரின் அவசியம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வூடகச் சந்திப்பு மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கமிஷன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:-

காலாகாலமாக எமது தமிழினம் சிங்களத் தலைமைகளின் ஏமாற்று வார்த்தைகளை நம்பி,ஏமாறிய வரலாறுகள் அரங்கேறின. இந்நிலையில் எமது ஒற்றுமையின் பலத்தை பெரும்பான்மை சமூகத்துக்கு மட்டுமன்றி,சர்வதேசத்துக்கும் உணர்த்த வேண்டிய தேவையுள்ளது.

 இக்கைங்கரியத்தை நாம் செயற்படுத்த தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வாக்களிக்க முன்வர வேண்டும்.

தமிழ் மக்கள் பொதுச் சபையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஏழு கட்சிகள் இணைந்து அண்மையில் ஒரு பொது உடன்படிக்கைக்கு வந்தனர். அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருந்தது.

 இந்நிலையில் தமிழ் அரசியலில் மூத்த தலைவராகிய சம்பந்தன் ஐயாவின் மறைவை முன்னிட்டு அந்த வைபவம் பிற்போடப்பட்டது. அந்த வைபவத்தில் தமிழ்க் கட்சிகள் ஏழும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் 7 பேரும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் பொதுச்சபையானது ஜனநாயகத்தில் ஈடுபடும் ஒரு கட்டமைப்பு அல்ல. அது நேரடி ஜனநாயகத்தில் ஈடுபடும் ஒரு கட்டமைப்பு ஆகும். அது கட்சி போல் தேர்தல்களில் ஈடுபடாது. தமிழ் மக்கள் பொதுச்சபை போல் ஒவ்வொரு நம்பிக்கை கொண்ட அமைப்புகள் உண்டு.அந்த அடிப்படையில் அங்கு பல்வகைமை உண்டு. தமிழ் மக்கள் பொதுச் சபையில் காணப்படும் மக்கள் அமைப்புகளில் சிலர் கட்சி அரசியலில் ஈடுபடக் கூடாது என்கின்ற யாப்பை கொண்டுள்ளனர்.

சில அமைப்புகள் நேரடியாக கட்சிகளோடு லசம்பந்தப்படும் விடயங்களை தவிர்க்கின்ற அமைப்புகள் ஆகும். அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் பொதுச் சபையானது தன்னுடைய பல்வகைமையையும் சுயாதீனத்தையும் தொடர்ந்து பேணும். அது மக்கள் அமைப்பாக தொடர்ந்து தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்பும் உறுதி இலக்கோடு தொடர்ந்து உழைக்கும்.

அதேசமயம் தமிழ் மக்கள் பொதுச் சபையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவார்கள். அந்த பொதுக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை உருவாக்குவதற்காக உழைக்கும். இதன்போது  கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும். பின்னர் அந்த பொது கட்டமைப்பின் கீழ் உப கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

அந்த உப கட்டமைப்புகளிலான ஒரு பொது வேட்பாளர் யார்? என்பதற்கான உப கட்டமைப்பு ஒரு பொது வேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான உப கட்டமைப்பு நிதி நடவடிக்கைகளை நிர்வாகிப்பதற்கான உப கட்டமைப்பு, பல்வேறு உப கட்டமைப்புகள் உருவாகும். அந்த பொது கட்டமைப்புக்குள் கட்சிகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் சம அளவில் சம எண்ணிக்கையில் சம பங்காளிகளாக இருப்பார்கள்.

 இந்த கட்டமைப்புகளின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஒரு பொது தமிழ் வேட்பாளரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

 சிவில் சமூக செயற்பட்டாளர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்ததாவது:-

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக நாங்கள் இப்போது வாகரை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்குச் சென்று இது தொடர்பாக விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

 அந்தக் கூட்டங்களின் பிரதிபலனாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் கிட்டத்தட்ட 60 தொடக்கம் 70 க்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த இடத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள்.

உண்மையான சரியான அரசியல் விழிப்புணர்வு ஒன்றினை எடுப்பதற்காக மக்கள் மத்தியில் இது தொடர்பான ஆதரவுத் தளம் உருவாவது கண்கூடு.

அண்மையில்  வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் நடந்ததன் பிற்பாடு மூன்றாவதாக இந்தப் பொதுச் சபைக் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றிருக்கின்றது. கடந்த மூன்று கூட்டங்களையும் பார்க்கும் போது வரும் மக்களின் எண்ணிக்கை  அதிகரித்த வண்ணமே உள்ளது. மக்கள் குழுக்கள், சிவில் சமூகங்கள், பொதுமக்கள் அமைப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றதே தவிர குறைந்த சந்தர்ப்பம் உருவாகவில்லை.

எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வரவேண்டும் என்கின்ற சிந்தனை அவர்களுக்கு வரும் போது அதனுடைய ஒற்றுமையும் பலமும் அதிகரித்துக் காணப்படும் - என்றார்.

சமூக செயட்பாட்டாளர்
அருட்தந்தை லூக் தெரிவித்ததாவது:-

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாக தமிழ் சமூகம் துண்டு துண்டுகளாக உடைந்தும், சிதறியும் காணப்படுகின்றது. மற்றும் ஒரு பக்கத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், அதுவும் பல துண்டுகளாகச் சிதறி கிடக்கின்றது.எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் தமிழர்களாக குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களாக ஒரு கிளர்ச்சியாக ஒன்றிணைந்து நிற்கின்றோம் என்பதனை மறுபடியும் இலங்கை நாட்டுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் சொல்ல வேண்டிய தேவை இந்த காலத்தில் எழுந்துள்ளது.

எனவே அந்தத் தேவையை நாங்கள் சொல்வதற்கு நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே அந்த ஜனாதிபதி தேர்தலிலே நாம் வடக்கு கிழக்கிலே ஓர் அணியில் ஒரு நேர்கோட்டில் நிற்கின்றோம் என்பதனை மறுபடியும் இலங்கை நாட்டிலே உறுதிப்படுத்துவதற்காக தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டிய தேவையுள்ளது.

இந்த தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சியிலே தமிழ் மக்கள் பொதுச்சபை இறங்கி இருக்கின்றது. அதனுடைய மூன்றாவது கட்ட கூட்டம் இன்று மட்டக்களப்பில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று இருக்கின்றது. 60 தொடக்கம் 65 க்கு மேற்பட்ட சமூக மட்ட அமைப்புகள் இதில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே நடந்த இரண்டு கூட்டங்களையும் பார்க்கின்றபோது இம்முறை இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கின்ற பிரதிநிதிகளுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது.

எனவே இது காலத்தின் தேவை. தமிழ் சமூகமாக நாம் இனியும் உடைந்தோ அல்லது சிதறியோ எமது விடயங்களை- அரசியலை முன்னெடுக்க முடியாது என்பதற்காக இந்த ஜனாதிபதித் தேர்தலை நாம் சிறப்பான முறையில் கையாள வேண்டும். இதனை தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தமிழ்ப் பொது வேட்பாளரை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

இவ்வூடகச் சந்திப்பில்  பொதுமக்கள் சபை உறுப்பினர் கே.ரி.கணேசலிங்கமும் கலந்து கொண்டார்.