ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் 145 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசாங்கத்தில் இணைந்துள்ள சுமார் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஏனையோரில் மிகக் குறைந்தளவானோரே மகிந்த ராஜபக்ஷ அணியுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து எதிர்காலத்தில் ஆளுமைமிக்க தலைவரொருவர் இல்லையென்ற நிலைப்பாட்டை இவர்கள் கொண்டுள்ளதும் மகிந்த ராஜபக்ஷ தற்போது சில உடல் உபாதைகளினால் அவதிப்பட்டு வருவதும் நாடு ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய பொதுஜன பெரமுனவால் முடியாததும் இவற்றில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஒருவரையோ அல்லது
நாடு ஏற்றுக்கொள்ளும் ஒருவரையோ முன் நிறுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின்
தலைமைக்கு கடும் அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படாவிட்டால்
பொதுஜன பெரமுனவை, ஒரு சிலரை தவிர பலர் கைவிட்டுச்
செல்லும் நிலை உருவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.