உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை துரிதப்படுத்துமாறும், ஓரிரு வாரங்களுக்குள் அதனை மேற்கொண்டு ஆவண செய்யுமாறும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்
பிரதமர் தினேஷ் குணவர்த்தன மாகாண ஆளுநர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது
இதில் ,வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களுடன் , வட மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், மேல்மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக ஆகியோர் கலந்து கொண்டனர்
இதன் போது கருத்து வெளியிட்ட வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள்,
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக தான் பொறுப்பேற்றவுடன் அதுவரை உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆயிரத்தி இருநூறு பேருக்கு மேல் நிரந்தர நியமனம் வழங்கியதாகவும், தொள்ளாயிரம் பேருக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் வழங்கியதாகவும், சுமார் ஒன்பது வருடங்களாக அவர்கள் நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றி வருவதாகவும் சுட்டிக் காட்டினார்
எனவே உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓரிரு வார காலத்துக்குள் நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினார்
பிரதமர் தினேஷ் குணவர்த்தன அதனை ஏற்றுக் கொண்டு, அதற்கான அங்கீகாரம் வழங்கினார். அது தொடர்பான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்
அதனடிப்படையில் நாடு முழுவதும் சுமார் 8435 பேர் நியமனம் பெறவுள்ள நிலையில், வடமேல் மாகாணத்தில் அதிகபட்சமாக சுமார் ஆயிரத்தி இருநூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்
வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராக பணியாற்றியபோது இணைத்துக் கொள்ளப்பட்ட தொள்ளாயிரத்துக்கு மேற்பட்டோரும் இதன் போது பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்
அத்துடன் சகல வளங்களையும் கொண்டு, இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ள வடமேற்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து கூடுதல் கரிசனம் காட்டப்பட வேண்டும் என்றும் ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள் விடுத்த வேண்டுகோளை பிரதமர் ஏற்றுக் கொண்டார்
இதன் போது வடமேற்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பத்துறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், அவற்றை முன்கொண்டு செல்வதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் கௌரவ ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்
வடமேல் மாகாண அபிவிருத்தி குறித்த ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களின் ஏனைய கோரிக்கைகளையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன உறுதி அளித்துள்ளார்
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள், மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்