அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி உடன் தேசிய வளங்களை பாதுகாக்கும் கூட்டணி இணைந்து நடாத்திய கையெழுத்துப் போராட்டம்!











(கல்லடி செய்தியாளர் & கிரிஸ்டி)

 
அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி உடன் தேசிய வளங்களை பாதுகாக்கும் கூட்டணி இணைந்து இன்று புதன்கிழமை (12) மட்டக்களப்பு    காந்திப் பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

"தேசிய வளங்களை பாதுகாத்திட முழு நாடும் உச்ச நீதிமன்றத்தை நாடி 10 லட்சம் பொதுமக்கள் கையெழுத்துக்களை கொண்ட மகஜிரில் கையெழுத்திடல்" எனும் தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா டெலிகொம், அரசு வங்கிகள், இலங்கை தபால், ஸ்ரீலங்கா காப்புறுதி நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை, அதன் நிறுவனங்கள் ஆகியவற்றின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

10 இலட்சம் கையெழுத்துக்களை கொண்ட மகஜர் ஒன்றினைக் கொண்டு அரசு சொத்துக்களை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றில் இந்த தொழிற்சங்கங்களினால் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதனை முன்னிட்டு இந்த கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையானது இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நடவடிக்கையில் அஞ்சல் துறை தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம், மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஊழியர்கள் இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டவை குறிப்பிடத்தக்கது.

இந்த மகஜரில் தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என வருகை தந்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.