“ஜனாதிபதியாகும் கனவில் உள்ளவர்கள் வடக்குக்கு சென்று 13 ஆவது திருத்தத்தை வழங்குவதாகக் கூற அது ஒன்றும் இவர்களின் அப்பன் வழிச் சொத்தல்ல. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க நாங்கள் இரத்தம் சிந்தியுள்ளோம். 13 ஆவது திருத்தத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்கள் அனைவரும் தேசத் துரோகிகளே” என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல்
சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தாா்.
அவர் மேலும் பேசுகையில்,
ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும். சிறந்த திறமையுடைய நபரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 2022 ஆம் ஆண்டைவிடவும் நாடு தற்போது முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படவில்லை என்பதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி தெரிவு இடம்பெற்ற போது பிறிதொரு நபரின் பெயரை வேட்பாளராக அறிவித்து விட்டு தலைமறைவாக இருந்தவர்களினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. ஜனாதிபதியாகும் கனவில் உள்ளவர்கள் வடக்குக்கு சென்று 13 ஆவது திருத்தத்தை வழங்குவதாக வாக்குறுதி வழங்குகிறார்கள். 13 ஆவது திருத்தம் இவர்களின் அப்பன் வழி சொத்தல்ல, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க நாங்கள் இரத்தம் சிந்தியுள்ளோம்.
தெற்கில் எவர் எதிர்த்தாலும் 13 வழங்குவோம் என்றுவாக்குறுதி வழங்குபவர்களின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே தேர்தல் காலத்தில் வடக்கிலும், தெற்கிலும் 13 ஆவது திருத்தம் பற்றி பேசப்படுகிறது. ஆகவே இவர்களுக்கு வடக்கு மக்களும்,தெற்கு மக்களும் வாக்களிக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்கள் அனைவரும் தேசத் துரோகிகளே” என்றார்.