தமிழ்ப் பொது வேட்பாளரினை நாம் களமிறக்கினால் தமிழ் மக்களுக்குக் கிடைக்க போவது என்ன? -முன்னாள் பிரதியமைச்சர் கேள்வி?



(கல்லடி செய்தியாளர்)

தமிழ்ப் பொது வேட்பாளரினை நாம் களமிறக்கினால் தமிழ் மக்களுக்குக் கிடைக்க போவது என்ன?  என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான  எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பாக மட்டக்களப்புத் தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-

ரணில் விக்கிரமசிங்கா தான் நாட்டில் நிலவிய பொருளாதாரப் பிரச்சனையை தற்போது ஓரளவுக்கு நிவர்த்தி செய்துள்ளார்.

இந்நிலையில்  எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான காணிப் பிரச்சனைகளுக்குரிய நிரந்தரத் தீர்வினைக்  காணும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

அதற்கு ஆதரவாகத் தான் நாம் மகளீர் மாநாட்டினை நடாத்தியிருந்தோம். ஏனைய தமிழ்க் கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளருடன் ஒரு ஒப்பந்தத்தை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

எங்களுடைய மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் உண்டு. வடகிழக்கில் தொல்பொருள் என்ற போர்வையில் நில அபகரிப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மொட்டுக் கட்சியினருக்கு சஜித் பிரேமதாசாவைக் கொண்டு ஊழல் மிக்க அரசாங்கத்தை நடத்த முடியாது என்பது தெரியும்.

சுற்றுலாத் துறை மூலம் வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிக டாலர்களைக் கொண்டு வருவதால் தற்போது நாட்டில் ஒரு சீரான தன்மை நிலவுகின்றது.

மக்களுடைய வாழ்க்கைச் செலவு தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் இலங்கையினுடைய பொருளாதாரம் தற்போது ஓரளவு சீர் செய்யப் பட்டுள்ளது- என்றார்.