சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும் 40 பில்லியன் ரூபாவை அதற்காக செலுத்த நேரிடும் .

 


சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காக செலுத்த நேரிடும்   என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய   தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது கேள்வியின் போது, வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்  கேட்டுக்கொண்டார்.

இதற்கு  நிதி இராஜாங்க அமைச்சர் பதிலளித்த போதே, இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்கு கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியை குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர் கொள்ள நேர்ந்துள்ளது என்றார்.