ஓட்டமாவடி பிரதேச செயலாளராக அபூபக்கர் தாஹிர் கடமையேற்றார்



கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் செயலாளராக அபூபக்கர் தாஹிர் (SLAS) அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டு, அதற்கான உத்தியோகபூர்வ நியமனக்கடித்தத்தை நேற்று (25) அமைச்சின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட நிலையில், இன்று (26) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளராக இருந்த வீ.தவராஜா மரணமடைந்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில், உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஆர்.ஷியாஉல் ஹக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கணக்காளர் எம்.சஜ்ஜாத் அஹமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், மாவட்டப்பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எ.ஐ.ஏ.அஸீஸ், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அப்துல் காதர் அபூபக்கர், மீராசாய்வு சுபைதா உம்மா ஆகியோரின் புதல்வரான இவர், ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவரும் கல்லூரியின் கணித, விஞ்ஞானப்பிரிவின் முதல் மாணவருமாவார்.

அத்துடன், கடந்த காலங்களில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவர் சங்கச்செயலாளராக கல்லூரிசார் செயற்பாடுகளிலும் கல்குடா பள்ளிவாயல் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொருளாளராக சமூகம் சார் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றியுள்ளதுடன், கிராம மட்ட அமைப்புக்களில் பங்கு கொண்டு சமூக சேவைப்பணிகளில் ஈடுபாட்டுடன் செயலாற்றியுள்ளார்.

பொதுச்சேவைத்துறையில் அனுபவமும் நிருவாக ஆளுமையையும் பெற்ற இவர், மத்திய அரசினால் அகில இலங்கை ரீதியில் 2012ம் ஆண்டு நடாத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை நிருவாக சேவை  அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

மர்ஹூம் ஏ.கே.எம்.உதுமான் (SLAS) அவர்களுக்குப்பின் சுமார் இருபது ஆண்டுகளுக்குப்பின்னர் பிரதேசத்திலிருந்து அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நிருவாக சேவை அதிகாரி என்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரராகவும் திகழ்கின்றார்.

நிருவாக சேவை அதிகாரியாகத்தெரிவு செய்யப்பட்டு உதவித்தொழில் ஆணையாளராக கொழும்பிலும் உதவிப்பிரதேச செயலாளராக தோப்பூரிலும் பிரதேச செயலாளராக மூதூரிலும் கடமையாற்றிய நிலையில், மட்டக்களப்பு மாவட்ட உதவித்தொழில் ஆணையளராக நியமனம் பெற்றார்.

மட்டக்களப்பு மாவட்ட உதவித்தொழில் ஆணையாளராகவும், கிழக்கு மாகாண தொழில் ஆணையாளராகவும் கடமை புரிந்து வந்த நிலையில் இன்று (26) முதல் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி  பிதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.