2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியான நிலையில் வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் மாவட்ட ரீதியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஆறாவது இடத்தையும் வணிகப்பிரிவில் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தையும் கணிதப்பிரிவில் பத்தாவது இடத்தையும், கலைப்பிரிவில் நான்காவது ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் இப்பாடசாலையிலிருந்து மருத்துவத் துறைக்கு 9 மாணவிகளும், பொறியியல் துறைக்கு 9 மாணவிகளும், வர்த்தகத் துறையில் 13 மாணவிகளும், கலைத்துறையில் சட்டத்துறைக்கு 4 மாணவிகள் உட்பட 18 மாணவிகளும் பல்களைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதுதவிர ஏனைய துறைகளுக்காக 52 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்ல தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களில் இப்பாடசாலையின் க.பொ.த. உயர்தரப் பெறுபேறுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியினை சீர் செய்யும் நோக்கில் பாடசாலை அதிபர் திருமதி. ரீ. உதயகுமாரின் வழிகாட்டலில் பாடசலை சமுகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன எடுத்துக் கொண்ட விசேட வேலைத்திட்டம் காரணமாகவே இந்த அடைவ பெற்றப்பட்டதாக உதவி அதிபர் எம். பாலகிருஷ்னன் இன்று (6) வின்சன்ட் பாடசாலையில் இடம்பெற்ற பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
பாடசாலை நிறுவாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த செயல் திட்டங்களினால் இம்முறை வின்சன்ட் மகளிர் மாணவிகள் வர்த்தகப்பிரிவில் 100 வீதம் சித்தி பெற்றுள்ளதுடன், சுமார் 17 மாணவிகள் 3 பாடங்களிலும் ஏ. தரத்தில் சித்தி பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
எனவே இவ்வாறான மகத்தான சாதனையினை புரிந்த மாணவ செல்வங்களை வாழ்த்துவதுடன் இதற்கென முன்நின்று உழைத்த கல்விப்பணிப்பாளர், அவருடன் இணைந்த குழாமினர், உதவி மற்றும் பிரதி அதிபர்கள், பிரிவுத் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியியலாளர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் மக்கள் தெரிவித்துவருகின்றனர்.