தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்- இரா.சம்பந்தன்

 

 


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும்
வலுப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரெஞ்சுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வறு வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் இரு தரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தி எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பது பற்றி எதிர்வரும் காலங்களில் விரிவாகப் பேசலாம் என்றும் குறிப்பிட்டார்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பௌத்த சிங்களமயமாக்கம் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்னைகள் தொடர்பிலும் இதன்போது மார்க் அன்ட்ரூ பிரெஞ்சிடம் எடுத்துரைக்கப்பட்டது.இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு தசாப்த காலம் கடந்துள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்
காட்டிய சம்பந்தன் தரப்பினர், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான
நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.