தமிழ்நாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

 


 

 தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை அமைச்சரும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் சமர்ப்பித்துள்ளார்.

பல்வேறு காலகட்டங்களில் இலங்கையிலிருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்களை பாதுகாத்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு சுமார் 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால தேவைகள் மற்றும் தீர்வுகள், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் குறித்து ஆராய்ந்து அதற்கான இடைக்கால அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான வழிகளை இடைக்கால அறிக்கை ஆராய்ந்து, இது தொடர்பாக சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகள் மற்றும் குடியுரிமைக்கான சட்டப் பாதைகள் குறித்த முக்கிய பரிந்துரைகள் இந்த இடைக்கால அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.