கிழக்கின் ஆளுநருடன் அலி ஸாஹிர் மௌலானா சிநேகபூர்வ சந்திப்பு.





கிழக்கின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களுக்கும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு  வியாழக்கிழமை  காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது,

இதன்போது புதிய ஆளுநருக்கு தமது வாழ்த்துக்களை பகிர்ந்ததுடன் , தன்னுடனான நீண்டகால நட்பினையும் , கிழக்கிலே மாகாண சபை பிரதிநிதிகளை கொண்ட சபை இயக்கத்தில் இல்லாத தருணத்தில் அதில் அனுபவத்தை கொண்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கின் ஆளுநராக கிடைத்துள்ளமைக்காக தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் , புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட பிற்பாடு கிழக்கிலே  மேற்கொள்ளப்படும்  ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் மக்கள் சார்பிலே தெரிவித்ததுடன்,

பல்வேறு மக்கள் சார் விடயங்கள் , மாகாண நிருவாக செயற்பாட்டிலே  நீண்டகாலமாக கிடப்பிலே உள்ள சில விடயங்கள் குறித்தும் ஆளுநரின் கவனத்திற்கு அலி சாஹிர் மௌலானா அவர்கள் கொண்டு வந்ததை அடுத்து உடனடியாக அவ்விடத்திற்கு செயலாளர்கள் , விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதுடன் தீர்வுகளையும் , துரிதமாக அடுத்த கட்ட நகர்வுகளையும் முன்னெடுக்குமாறு பணிப்புரையும் கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் விடுக்கப்பட்டதுடன் , அனைவரையும் அனுசரித்து பேதங்கள் அற்ற முறையில் தனது பதவிக்காலத்தினுள் கிழக்கிலே வினைத்திறன் மிக்கி பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிட்டார்,

குறித்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவுடன் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் நழீம் , மற்றும் செய்யிட் அஹமட் ஸாஹிர் மௌலானா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.