மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்சமயத்தினூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயலமர்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்றது.
மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்
உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகத்தின் ஒழுங்கமைப்பில் நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில்
இன்று (15) இடம் பெற்றது.
மாவட்டத்தில் இனங்கள், மதங்களுக்கிடையில், சகவாழ்வு நல்லுறவு, புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில்
இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தலைவர்களின் பங்களிப்புடன் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த உதவி மாவட்ட செயலாளர் மனித குல நல்வாழ்வை மேம்படுத்த உதவும் போதனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுத்து சகோதரத்துவம், ஐக்கியம், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் நற்பணியினை மேற்கொள்ள அனைவரும் ஈடுபட வேண்டும் என்றார்.
இச் செயலமர்வில் மும்மத தலைவர்களின் அனுபவ பகிர்வும் கலந்துரையாடலும் இடம் பெற்றதுடன் இலங்கை தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் எம். உவைஸ் வளவாளராக செயற்பட்டார்.
இந் நிகழ்வில் இஸ்லாமிய கலாசார உத்தியோகத்தர் எம். யேனுலாப்தீன் இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.