மட்டக்களப்பில் மிதக்கும் சூரிய சக்தி மின்சாரத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் .

 








மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் மிதக்கும் சூரிய சக்தி மின்சாரத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா வின் ஆலோசனையின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (12) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இத்திட்டம் குறித்த முன்மொழிவு சோளார் பெட்ரொனேஜ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தினால் முன்னளிக்கை செய்யப்பட்டு அது தொடர்பான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவின் சூரிய ஒளி நேரடியாகப் படக்கூடிய கொத்துக்குளம் வாவிப் பகுதி இம்மிதக்கும் சூரிய சக்தி மின்சார தகட்டைப் பொருத்துவதற்கு ஏற்ற இடமாக அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், 0.133546 சதுர கிலோமீற்றரில் நில மற்றும் 0.094 சதுர கிலோ மீற்றர் வாவிப் பகுதியும் இத்திட்டத்திற்குப் பயன்படுத்துதல் தொடர்பான அனுமதியைப் பெறுதல் குறித்து கலந்துரையாடப்பட்டது.
10 மெகா வாட்ஸ் மின்சாரத்தை இதனால் உற்பத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான காணியை காணி ஆணைக்குழு குத்தகை அடிப்படையில் பெறப்படவுள்ளதுடன் மின்சக்தி அமைச்சின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் எம்.வாசுதேவன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.கோகுலன்,சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரி சமீர தர்மாராஜ, நீர்ப்பாசனத் திணைக்களப் பிரதம பொறியியளாலர் ஆர். ராஜன், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி ஆகிய திணைக்களங்கள், மட்டக்களப்பு மாநகரசபை , மின்சார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவ சங்க அங்கத்தவர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.