முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பூசை வழிபாடுகள், அஞ்சலிப் பிரார்த்தனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

 






 

 

 மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பூசை வழிபாடுகள், அஞ்சலிப் பிரார்த்தனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டக் கிளைகளின் ஏற்பாட்டில் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் நாவிதன்வெளி முருகன் ஆலயத்தில் மேற்படி நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் அவர்களி ஆத்மா சாந்திக்காகவும் கூட்டுப் பிரார்த்தனைகள், பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து போராளிகள் குடும்ப பெற்றோரால் பிரதான சுடரேற்றப்பட்டதுடன், அனைவராலும் அஞ்சலிச் சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இறுதியில் உயிரிழந்த உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு, அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.