களுத்துறை சிறுமி மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது - கொலையா, தற்கொலையா என விசாரணை தொடர்கிறது!!


களுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, பலாத்தொட்ட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த நபர் இன்று (09) அதிகாலை காலியின், ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் காலி பிரதேசத்தில் பதுங்கியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றத்தடுப்பு பிரிவின் கட்டளைத்தளபதி பொலிஸ் பரிசோதகர் தம்மிக சில்வா தலைமையிலான குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு ஹிக்கடுவை பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் லீசிங் வாகனங்களுக்கு பணம் செலுத்தாத நிலையில் அவற்றை கையப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை முயற்சி செய்துள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் நிலவுவதாகவும், கொலை எனும் அடிப்படையிலேயே விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

உயிரிழந்த பாடசாலை மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் கடந்த 6ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், தேசிய அடையாள அட்டையை அளித்து, குறித்த ஹோட்டலில் இரண்டு அறைகளை பதிவு செய்துள்ளனர்

இரண்டு அறைகளை பதிவு செய்த போதும் நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த குழுவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றைய இளைஞனும் பீதியுடன் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 7.30 - 8.00 மணி வரை அவர்கள் அங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது ஹோட்டலுக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் ஹோட்டலை அண்மித்த புகையிரத தண்டவாளத்திற்று அருகில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 11 ஆம் தரத்தில் களுத்துறை பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக உள்ளதால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

திடீரென ஹோட்டல் அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞன், முன்னதாக ஹோட்டலில் இருந்து வெளியேறிய இளைஞனையும் யுவதியையும் அவசரம் என அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து புகையிரத பாதையில் குதித்ததாக தெரிவித்து விட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலத்தை மற்றைய இளைஞனும், யுவதியும் அதிலிருந்து அப்புறப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறி இரவு 9.30 மணியளவில் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

இதேவேளை, மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த காரின் சாரதியையும் பொலிஸார் கைது செய்திருந்திருந்தனர்.

பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்வரும் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது

குறித்த, சிறுமியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் 2 பெண்களை திருமணம் செய்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரது இரண்டாவது மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் சட்ட வைத்தியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவர் எவ்வாறு மரணமடைந்துள்ளார் என்பதை அறிய சிறுமியின் உடல் உறுப்புகள் அரசாங்க பகுப்பாய்வு அதிகரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.