முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து இன்றுடன் 131 வருடங்கள் ஆகின்றன, 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார்.
சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத பல செயற்பாடுகளை தனது முயற்சியால் சாதித்து காட்டிய மகான் சுவாமி விபுலானந்த அடிகளார். கல்வி, சமயம் மற்றும் சமூகப்பணிகளில் சுயநலம் இன்றி தன்னை அர்ப்பணித்து சேவை செய்தார்.
மட்டக்களப்பு கல்லடி - உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும்.
தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார்.
கிழக்கிலங்கையில் அவதரித்து உலகின் முதல் தமிழ் பேராசிரியராக உயர்ந்த மாபெரும் ஆளுமையான சுவாமிகள் எமது சமூகம் மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கியபோது அதனை மீட்டெடுத்து நெறிப்படுத்தியவர் என்பதுடன், ஏழைகளின் வாழ்வில் கல்வி எனும் ஒளி ஏற்றிய கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்.
அடிகளாரது ஜனன தினம் இன்று கல்லடி - உப்போடையில் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரின் ஒழுங்கமைப்பில் அனுட்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் பொறுப்பாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அடிகளாரது சமாதியில் மலர் மாலை அணிவித்து, பூக்கள் தூவி, "வெள்ளை நிற மல்லிகையோ" பாடல் பாடி ஜனனதின நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள நீரூற்றுப் பூங்காவில் உள்ள அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















