மீள்குடியேற்ற மக்களின் சமூக ஒன்றினைவுக்கான உதவி திட்டத்தின் ஒரு அங்கமான வெறுப்புப்பேச்சு மற்றும் வன்முறைத் தீவிரவாதம் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் இரண்டு நாள் செயலமர்வானது இன்று (13) திகதி மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நோர்வே அரசாங்கத்தின் நிதி அனுசரனையுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), பிரெண்டீனா (Berendina) மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நடாத்தப்படும் குறித்த இரண்டு நாள் செயலமர்வானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான  திட்ட  நிபுணர் கே.பார்த்தீபன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் நோர்வே அரசுடன் இணைந்து வடகிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களிற்கான செயற்திட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்ற திட்டம் இடம்பெற்றுள்ள பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை இச்செயலமர்விற்கு அழைத்து அவர்களை பயிற்றுவிப்பாளர்களாக மேம்படுத்தும் நோக்கிலேயே இச்செயலமர்வு இடம்பெறுகின்றது.
இதன்போது மனிதாபிமானம், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம், வெறுப்புப் பேச்சு, பேச்சு சுதந்திரம், வெறுப்புப் பேச்சின் விளைவுகள், வெறுப்புப் பேச்சினால் ஏற்படும் வன்முறை தீவிரவாதம் தொடர்பான பாதக தன்மைகள், ஊடகங்களின் கடமைகள், வெறுப்பு பேச்சும் வன்முறை தீவிரவாதத்தின் இயக்கிகளும், வெறுப்பு பேச்சை எவ்வாறு இனங்காணல், இலங்கையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக கையாளப்படும் சட்டங்கள், வெறுப்பு பேச்சை அடையாளம் காணும் விதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள் தொடர்பாக இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அரச திணைக்களங்களின் 25  உயரதிகாரிகள் கலந்துகொண்ட 
இச்செயலமர்விற்கு வளவாளராக வன்முறையற்ற தொடர்பாடல் தொடர்பான அதிகாரம் பெற்ற பயிற்றுனரான ரமனுஷா பூபாலநாதன் கலந்துகொண்டு செயலமர்வினை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 





 
 




 
 
 
 
.jpeg) 
