வங்கியின் பண வைப்பு இயந்திரத்தை (சிடிஎம்) 76 இலட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளையிட்ட ஏழு பேர் கைது.

 


கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கியின் பண வைப்பு இயந்திரத்தை (சிடிஎம்) 76 இலட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளையிட்ட குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இரட்டைச் சகோதரர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனவரி 24ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களில் நால்வர் புத்தளம் வான வீதியில் வசிப்பவர்கள் எனவும் எஞ்சிய மூவர்  கலஹா தெல்தோட்டை  கிறேட்வெளி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தில் வசிப்பவர்கள்  கம்பளை கஹடபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கொள்ளையிடப்பட்ட பணத்தில் பதினெட்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா மீட்கப்பட்டுள்ளதுடன்,
வேன், மோட்டார் சைக்கிள், இரண்டு தங்க நெக்லஸ்கள், மூன்று கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீடு எரிக்கப்பட்ட போது பிரதான சந்தேகநபரிடம் இதற்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி காணப்பட்டதுடன் துப்பாக்கி திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
திருடப்பட்ட பண வைப்பு இயந்திரம் அகற்றப்பட்டு, கலஹா ஆல்வத்த  குவாரிக்கு அருகில் உள்ள குன்றின் கீழே நூறு மீட்டர் கீழே போடப்பட்டு இருந்தது. 

கே.டி.எச். வேன் ஒன்றும் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸாரின் விசாரணையில், இந்தக் கொள்ளையர்கள் வாடகை அடிப்படையில் வேனை எடுத்துச் சென்றுள்ளனர் எனவும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அவர்கள் ஈடுபடவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள் கலஹா பிரதேசத்தில் இதற்கு முன்னர் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை மற்றும் இரண்டு தங்க நகை கடை திருட்டுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.