வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மகிழ்ச்சி .

 


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் ஊடாக அதன்கீழ் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை முடிவிற்குக்கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூறவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த நிலையில், நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி நீண்டகாலமாக சிறுபான்மையின மக்களையும் விமர்சனங்களை முன்வைப்பவர்களையும் அமைதிப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப் பட்டுவந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மன்னிப்புச்சபை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் மூலம் இந்த மனித உரிமை மீறலை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வருமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.