மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் சிறந்த தேக ஆரோக்கியத்தினை பேணவும் மாணவர்கள் மத்தியில் தவறான செய்பாடுகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்துள்ளது.
இதன்கீழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் உடற்பயிற்சி நிலையங்களை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது.
மட்டக்களப்பு நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் ஆறு பாடசாலைகளில் முதல் கட்டமாக இவ்வாறு உடற்பயிற்சி நிலையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தெற்காசியாவில் முதன்முறையாக மட்டக்களப்பு மாநகரசபை சிறுவர் நேய நகராக
மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் யுனிசேபின் நிதியுதவியுடன் செரி
அமைப்பினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன்கீழ் கல்லடி விபுலானந்தா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலையின்
அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின்
முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா,மாநகரசபை உறுப்பினர்களான ஜெயா மற்றும் மதன்,செரி அமைப்பின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த உடற்பயிற்சி நிலையத்தின் ஊடாக மாணவர்களின் உடற் தகைமையை பேணவும் மாணவர்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் நிலையினை இல்லாமல்செய்யவும் முடியும் என மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.





