மட்டக்களப்பு பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை (01) மாலை 6 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் ஹருணி அமரசூரிய சென்றார்.
பிரதமர் பாடசாலைக்குச் சென்றதால் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபடுமாறு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களினால் ஏற்கனவே அப்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அதற்கிணங்க ஊடகவியலாளர்கள் நேற்றைய தினம் மாலை 4 மணிக்கே பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு சென்றபோதும் அங்கு கடமையிலிருந்த பிரதமரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஊடகங்களுக்கு அனுமதியில்லை, என ஊடவியலாளர்களை அனுமதித்திருக்கவில்லை.
எனினும் பிரதமரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் தொலை பேசி இலக்கங்களை வழங்கி அவரிடம் அனுமதி பெற்று விட்டு உள்ளே செல்லலாம் என அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதற்கிணங்க அங்கிருந்த ஊடகவியலாளர்கள் குறித்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டதற்கிணங்க அவர் உரிய இடத்திற்கு வந்ததும் அனுமதி பெற்றுத் தரலாம் என தெரிவித்திருந்தார். இறுதியில் ஊடகவியலாளர்கள் அங்கு செய்தி சேகரிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இது இவ்வாறு இருக்க அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகஸ்த்தர்கள் அங்கிருந்த ஊடகவியலார்களை முறையாக வழிநடாத்த வில்லை எனவும், ஊடகவியலார்களை அவ்விடத்தில் நிற்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்ததாகவும், அங்கிருந்த ஊடகவியலார்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு ஊடகவியலார்களை அவமதித்ததானது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதமருக்கு தெரியாமலிருந்திருக்கலாம். எனவே இந்த விடயத்தை பிரதமர், ஜனாதிபதி, ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறு இந்நாட்டில் ஊடகவியலாளர்களை அவமதிக்கும் செயல் நாட்டில் இடம்பெறக்கூடாது எனவும் ஊடகவியலார்கள் தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.




