ஓர் உயிரைக் கொன்று உண்ணக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் செடிகொடிகளும் ஒரு உயிர் தானே? அப்போ சாப்பிட என்ன செய்வது?

 

 


 

இக்கேள்வி பலருக்கும் எழுவதுண்டு.

உலகில் மாந்தர்களாகிய நாம் ஓர் உயிரினம். நம்மைத்தவிர இந்த நிலவுலகில் ஏறத்தாழ 8,700,000 வகையான உயிரினங்கள் வாழ்கின்றனவாம் [1]. பாலுட்டிகளே ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. பறவைகள் ஏறத்தாழ 10,000 வகைகள் உள்ளன. 1.5 மில்லியன் வண்டினங்களும் 5.5 மில்லியன் பூச்சிகளும் உள்ளன.

யானை குதிரை, ஆடு மாடு போன்றவை தாவர உணவைத்தவிர பிறவற்றை உண்பதில்லை. ஆனால் வேறு சில உயிரினங்கள் மற்ற உயிரிகளை உண்டு வாழ்கின்றன. தாவரமும் உயிருள்ள ஒன்றுதானே எனில், அதுவும் உண்மைதான்.

கத்த்தரிக்காய், வெண்டைக்காய், மாம்பழம் போன்றவற்றை உண்ணும்பொழுது அச்செடிகளை நாம் "கொல்வதில்லை". அவை தரும் காய் கனிகளை உண்கின்றோம். ஆனால் கீரை, கிழங்கு, பூண்டு வெங்காயம் போன்றவற்றை உண்ணும்பொழுது அந்தச் செடியையே 'கொல்கின்றோம்' (வேரோடு பிடுங்குகின்றோம்). மிகவும் இறுக்கமாக மரக்கறி உண்பவர்கள் இந்தப் பூண்டு, வெங்காயம், கீரை போன்றவற்றை உண்ணமாட்டார்கள். ஆனால் நெல் பயிரிட்டு உண்பதிலும் பிற உணவு தானியங்களை உண்பதிலும் செடியைக் கொல்கின்றோம் ('அறுவடை').

வெறும் காய் கனியை மட்டும் உண்டு வாழ்பவர்கள் துறவிகளாக இருப்பார்கள்.
அவர்களும் சோறுண்பார்கள்!

ஆனால் உற்று நோக்கினால் அவர்களும் உயிர்க்கொலை செய்பவர்களே.
வாயில் துணி கட்டிக்கொண்டும், மயிற்பீலியை வீசிக்கொண்டும் நடப்பவர்களும் கூட உயிர்க்கொலை செய்பவர்களே.

ஆகவே தாவர உணவு உண்பவர்களும் உயிர்க்கொலை செய்கின்றார்களா என்றால், ஆம் என்று கொள்வதே சரியான பார்வை.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் பிற உயிரினங்களை ஏதோ ஒருவகையில் கொன்றுண்டுதான் வாழ்கின்றன.

இறைச்சி உண்ணும் மாந்தர்களும் கூட பிற மாந்தர்களை உண்ண மாட்டார்கள் அல்லவா? ஏன் மாந்தர்களுக்கு நெருக்கமான உயிரினமாகக் கருதும் குரங்குகளையும் உண்ண மாட்டார்கள். தங்கள் இனத்தை விட 'விலகியதாக'க் கருதபப்டும் பிற விலங்குகளின் இறைச்சியைத்தான் உண்கின்றார்கள்.
விலங்கின் இறைச்சியை உண்ணாதவர்களும் மீன்களை உண்பார்கள். நீர் வாழைக்காய் என்று சொல்வார்கள் (வங்காளியர்). சிலர் பூச்சி புழுக்களையும் உண்பார்கள் (அமேசான் காடுகளில் உள்ளவர்களும் கிழக்காசியாவிலும்).

 

தாவர உணவு உண்பவர்கள் தங்களின் உயிரினத்தில் இருந்து மிக மிக விலகிய உயிரினத்தை உண்கின்றார்கள். இதுதான் மரக்கறி உணவாளர்கள் கருதிக்கொள்ளக்கூடியது.

மிக முக்கியமான இன்னொரு கருத்தையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். உயிர்க்கொலை செய்யக்கூடாது என்று கருதுபவர்களும் தாம் வாழும் ஒவ்வொரு நாளும் கணக்கற்ற உயிர்களைக் கொல்கின்றார்கள். நீரிலும் காற்றிலும், நம் அன்றாட வாழ்விலும் கணக்கற்ற உயிர்களை நாம் கொல்கின்றோம்.

மாந்தர்கள் என்று கருதிக்கொள்ளும் நாம் உண்மையில் நம் உடலிலே 30 திரில்லியன் உயிரணுக்கள் (செல்கள், கலங்கள்) உள்ளன [2]. ஆனால் நம் உடலுக்குள் உயிர்வாழும் நுண்ணுயிரிகளின் உயிரணுக்களின் (bacterial cells)
எண்ணிக்கையோ 39 தில்லியன் [2],
ஒரு திரில்லியன் என்பது 1,000,000,000,000.
ஆகவே
நாமும் இந்த உயிர்க்குழாமில் சேர்ந்து வாழும் ஒர் உயிரினம்தான்.
இந்த நுண்ணுயிரிகள் நம்முடலில் இல்லை என்றால் நம் உணவு செரிக்காது, நாம் வாழவே முடியாது. நம் சிந்தனையைக்கூடத் தூண்டுகின்றனவாம் எனவே இந்த நுண்ணுயிரிகள் நம்மைப்போல் 60–90 ஆண்டுகள் வாழ்வன அல்ல. பாக்குட்டீரியா (நுண்ணுயிரி) சராசரியாக 12 மணிநேரம்தான் வாழ்கின்றன. எனவே நம்முடலுள் ஏராளமான உயிரிகள் மடிகின்றன. உயிர் மடிகைகள் இல்லாமல் உயிர்வாழவே முடியாது. நாம் என்று கருதும் நாம் ஏராளமான நுண்ணுயிரிகளுடன்
பிரிக்கமுடியாது சேர்ந்துவாழும் ஒரு கூட்டுயிர்தான்.

 நாம் அறிந்து உயிரைக் கொல்லவில்லை என்று சொல்லலாம், ஆனால் அறிந்து செய்தாலும் அறியாது செய்தாலும், உயிர்கள் இறக்காமல் நம்மால் வாழ முடியாது என்பது உண்மை. இப்படியெல்லாம் இருந்தாலும், அறிந்து கொல்லாமல் இருக்க முனைவது நல்லெண்ணமே. சில உயிர்களாவது காக்கபப்டுகின்றனவே. அறவுணர்வில் ஒப்பீட்டு அறம் (relative ethics) என்பார்களே அந்த வகையில் மரக்கறி உணவு உண்பார்களுக்கு சிறு முன்மை தரலாம். பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு எல்லாம் கொள்ள ஏதும் இடம் இல்லை.