தேர்தல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 


பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல் முறைகளுக்கான சர்வதேச ஒன்றியம்,ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் என்பன இணைந்து இந்த கலந்துரையாடலை முன்னெடுத்தன.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.இதனை அமுல்படுத்துவதற்கு தேவையான செயல்முறைகள் மற்றும் மக்கள் மத்தியில் இது தொடர்பில் உள்ள கருத்துகள் இதன்போது பெறப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு முன்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் பெறப்பட்டன.