ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துபவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடகாலமாக வரையறுக்கப் பட்டுள்ளதா ?


 

ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துபவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடகாலமாக வரையறுக்கப்படுவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பழைய சட்டங்களை மாற்றி நாட்டில் முறைமை மாற்றமொன்று ஏற்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில்தான் நாங்கள் 09 சட்டமூலங்களையும் சில ஒழுங்கு விதிகளையும் பாராளுமன்றத்தில் அங்கிகாரத்துக்காக முன்வைத்திருக்கின்றோம்.

முன்னாள் அமைச்சர் அலிசப்ரி நீதி அமைச்சர் என்ற முறைமையில் பல குழுக்களை ஸ்தாபதித்தார்.

ஏராளமான சட்டங்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அறிந்தார்.

நீதிபதிகள் சிரேஷ;ட சட்டத்தரணிகளின் உதவிகளை பெற்று இந்த சட்டமுறைமையில் பாரிய புரட்சியை ஏற்படுத்திதான் இந்த சட்டமூலங்கள் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக அபீன் அபாயகர ஒளடதங்கள் சட்டமூலத்தில் பல விடயங்களை நாம் கவனத்திற்கொண்டுள்ளோம்.

இந்த சட்டம் நடைமுறையில் கொண்டுவந்தபோது கருத்திற்கொள்ளப்படாத பல விடயங்கள் உள்ளன. புதிய பல போதைவஸ்துகள் சமூகத்துக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ஐஸ் என்ற போதைப் பொருளை எடுத்துக்கொண்டால் இந்த சட்டத்தில் அட்டவணையில் அது முன்னர் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை.

இது உண்மையில் பயங்கரமான ஒரு போதைப் பொருள். பல நிபுணத்துவ வைத்தியர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டுள்ளோம்.

ஏனைய போதைப் பொருட்களைவிட இது மிகவும் பயங்கரமானது. இந்த போதைப் பொருளானது மூளையின் இளையங்களை பாதிப்பதாகவும் மனிதர்களை விகாரப்படுத்துவதாகவும் அறியக்கிடைத்துள்ளது.