கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவு.

 


‘ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துக’ என்ற தொணிப் பொருளில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 100 ஆவது நாளின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை மட்.புனித சூசையப்பர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கொட்டும் மழை என்றும் பாராமல் பல தடைகளை தாண்டி மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கல்லூரி மைதானத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் 100 ஆவது நாளை நினைவு கூறும் முகமாக ஓளிச் சுடர் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

சமஷ்டி அரசியல் அதிகாரப் பகிர்வு,அரசியல் தீர்;வு, அரசியல் உரிமை என்பன போன்ற விடயங்கள் உள்ளடக்கியதாக சமூக செயற்பாட்டாளர்களினால் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல் முனைவின் நூறாவது நாள் புரையோடிக் கிடக்கின்ற தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘சமஷ்டி அரசியல் தீர்வு’ வேண்டிய மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டது. நேற்று காலை 10.30 மணிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களிலும் இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன்,மாநகர முதல்வர் சரவணபவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.