விளையாட்டு குழுக்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 


 

பிரதேச செயலக ரீதியாக நிறுவப்பட்டுள்ள விளையாட்டு குழுக்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் கடந்த வருடம் சகல மாவட்டங்களிலும் உள்ள பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக 21 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீர வீராங்கனைகளில் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒவ்வெரு பிரதேச செயலக பிரிவுகளிலும் தனித்துவம் வாய்ந்த விளையாட்டு குழுவினை நிறுவதற்கான செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் விளையாட்டு குழுக்கள் நிறுவப்பட்டு அதற்கான பயிற்றுவிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விளையாட்டு குழுக்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (விளையாட்டு) திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்ட வீர வீராங்கனைகளை வலுப்படுத்தும் வகையில் இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாவட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வரும் வீர வீராங்கனைகளின் திறமைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் அவர்களை வலுப்படுத்தி தேசிய மட்டத்திற்கு கொண்டு சென்று தேசிய மட்டத்தில் சாதனை புரிவதற்கு ஏற்றவகையில் இந்த பயிற்றுவிப்புக்கான முன் நடவடிக்கையாக குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வி.ஈஸ்வரனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் என துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.இதேவேளை மாவட்ட செயலக கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது