.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.

 

 

 

நீர்மை இணையம்


எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக மட்டும் பயணிக்க முடியாது.சற்று வளைந்தேயாக வேண்டும்.வேண்டாம் என மனிதனாய் விலகிச் சென்றாலும் அதுவாய்த் தேடி வந்து ஆறாத பல காயங்களைப் பாய்ச்சிவிடும்.

சவால்களற்ற வாழ்க்கையினையே அழகான வாழ்கையாக எமது சமூகத்தில்
பலரும் கருத்துக்களை விதைப்பதுவும் பெரும் சவால்தான்.ஏனெனில் காலம் சற்று அதன் வேர்களைப் பதிக்க அவர்களின் வாழ்க்கைக்கான உறுதியாக ஏற்படும் பிளவுகளைக் கண்டு அஞ்சி ஓடுவது எமது சமூகத்தின் தோல்விதான்.

மனிதனின் விதிக்குற்பட்டதுதான் வாழ்க்கை என்றிருந்தால் இவ் உலகம் எப்போதோ எவராலோ மாற்றப்பட்டிருக்கும். ஏற்கனவே இறைவனால் எழுதப்பட்டுவிட்ட எமது வாழ்க்கை நமக்கேற்றாற் போல ஓர்நாளில் மாறும் என்பதெல்லாம் புத்தகங்களில் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் வசீகரமான தத்துவங்கள். உண்மை அதுவல்ல,நாம் எமது வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கலாம்.அது கட்டாயம் நாம் எதிர்பார்த்த பதிலை அளிக்கும் என்பதாகாது.அதாவது, எதற்கும் முகங்கொடுக்கும் தைரியம் கட்டாயம் எம்மிடம் இருந்தாக வேண்டும்.

வீரனாவதற்கு தீரமான செயல்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.மனிதன் தனது வாழ்க்கையில் உள்ள தடைகளை உடைத்தெறிந்து மீண்டும் மனிதனாக உருவாகும் போதும் அவன் திடமான வீரன்தான்.

ஓலங்கள் நிறை இவ்வுலகில் ஒரு உள்ளத்தின் அழுகை மட்டும் வித்தியாசமாக ஓங்கி ஒலிக்கப் போகிறதா என்ன?உட்கார்ந்துகொண்டு மனிதன் உறைந்துபோனால் உலகம் பொறுப்பல்ல.

வாழ்க்கை என்றால் வயதுக்குள் கிடைப்பதாக எண்ணும் பலர் அதற்குள் நுழைந்த பின்னர்தான் அது அனுபவத்துடனும் அறிவுடனும் சம்பந்தப்பட்டதாய் உணர்கின்றனர்.
அது மகிழ்வுடன் வரையறுக்கப்பட்டதாய் நினைக்கும் பலர் நுழைந்த பின்னர்தான் அதற்கு இன்னோர் பக்கமும் உள்ளதை உணர்கின்றனர்.

உலகில் பெரிய பெரிய இலக்கை அடைந்தவர்களது வரலாற்றுப் பக்கங்களில், அவர்களால் கூட அடையப்படாத சிறு இலக்குகளை சில வேளைகளில் குறைந்த வயதிலேயே நாம் அடைந்திருப்போம்.ஆக எதிர்பார்த்த வாழ்க்கை அவர்களுக்குக் கூட இல்லை.

மகிழ்ச்சியொன்றே எதிர்காலத்தின் சோதனையாகவும் சிலவேளை மாறலாம்.
ஆக எல்லா நல்லவைகளுமே மகிழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டதல்ல.எல்லா மகிழ்ச்சியும் வயதுடன் சம்பந்தப்பட்டதுமல்ல.ஆக நலவு என்பது ஒரு சோதனையில் வீழ்ந்து அதிலிருந்து இறையருளுடன் மீள மீண்டெழுவதிலும் உள்ளது.

எனவே, சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆளுமையை உனது கடமை என எண்ணுவதனூடாக எண்ணிய வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்.எண்ணியவை எண்ணிய போல வேண்டும் எனும் அரிய பல கனவுகள் எல்லாம் கடனாகக் கூட நம்மில் பலருக்குக் கிடைக்காது.ஊருக்கும் உலகுக்குமல்ல உனக்காக மட்டுமான வாழ்வைத் தேர்ந்தெடு.அது வயதுக்குள் மட்டுமான பொருத்தமல்ல.அனுபவம் மற்றும் அறிவுடனான பொருத்தமாகும்!!