மட்டக்களப்பு மாநகரசபையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம்.

 


 

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கழிவுமுகாமைத்துவத்தினை தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான உதவிகளை பொதுமக்களும் உரிய திணைக்களங்களும் வழங்க முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம்  மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கழிவகற்றல் செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான உரிய தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகர ஆணையாளர் மதிவண்ணன்,பிரதி ஆணையாளர் யு.சிவராஜா,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்த டாக்டர் தர்சினி,மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார்,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்பட சுற்றாடல் திணைக்களம்,மாவட்ட செயலகம் உட்பட பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கடந்த சில தினங்களாக உக்காத கழிவுகள் மாநகரசபையினால் அகற்றப்படுகின்றபோதிலும் உக்ககூடிய கழிவுகள் அகற்றமுடியாத
சூழ்நிலையேற்பட்டதனால் மாநகரில் பல்வேறு சிக்கல் நிலைகள் தோன்றியுள்ள நிலையில் இந்த கூட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முறையான கழிவகற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் சேகரிக்கும் கழிவுகளை மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் சேமித்துவைப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக திருப்பெருந்துறையில் உள்ள கழிவு முகாமைத்துவம் செய்யும் நிலையில் நீதிமன்ற ரீதியான செயற்பாடுகள் மற்றும் அங்கு ஏற்பட்ட தீபரவல் காரணமாக அங்கு தொடர்ந்து கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து இங்கு ஆராயப்பட்டது.

இதனை தொடர்ந்து நாளைய தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து கள விஜயத்தினை மேற்கொண்டு தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது என இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.