தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி 80 நாளாக போராட்டம்.

 


‘தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை’ வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 80 ஆவது நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மயிலாம்பாவெளியில் நேற்று  நடைபெற்றது.

இன்று காலை மயிலாம்பாவெளி விபுலானந்தபுர பல நோக்க கட்டிடத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.இதேவேளை தாங்கள் பயமின்றி நடமாடக் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்.கருத்துச் சுதந்திரம் வேண்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கிராம உள் வீதியில் ஒன்று கூடியவர்கள் கையில் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு
கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர்.
வேண்டும் வேண்டும் அரசியல் உரிமை வேண்டும் எங்கள் நிலம் எமக்கு வேண்டும் ஒன்று கூடுவது எங்கள் உரிமை என கோசங்களை எழுப்பி ஊர்வலமாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா கலந்து கொண்டு வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கௌரவமானதும் நியாயமான ஒரு அரசியல் உரிமை கிடைக்கப் பெற வேண்டும் அந்த வகையில் எதிர்காலத்தில் சமூக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக
கௌரவமான ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கிறோம் எனக் கேட்டுக்கொண்டார்.

குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் தங்கள் பகுதியில் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயங்கள். வாழ்வாதார விடயங்கள்,குடியிருப்பு காணி இல்லாமை,வீடில்லா பிரச்சினை,வீதி புணருத்தாரனம், விவசாயம்,மீன் பிடி தொழில்களில் எதிர்நோக்கும் பிரச்சினை என பல்வேறுபட்ட விடயங்களை முன்வைத்து கௌரவமான அரசியல் உரிமையை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல் முனைவு போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பினர் சிவில் அமைப்புக்கள் இளைஞர் யுவதிகள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.