கல்முனையிலிருந்து செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி ஆழ்கடல் மீன் பிடிக்குச் சென்று திசைமாறி காணாமல் போன 4 மீனவர்களும் 15 நாட்களின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் இன்று (14) தெரிவித்தார்.
கல்முனையை சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி கபீர் (வயது 50) ,எம்.என். ஹில்மி (வயது 33),ஆகிய மீனவர்களே குறித்த படகில் சென்ற நிலையில், காணாமல் போய் இருந்தனர்.
அவர்கள் சென்ற படகின் ஜிபிஸ் தொழிநுட்ப கருவி பழுதடைந்தமையினால் திசை மாறி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு திசை மாறி தத்தளித்த படகினை ஒரு மீனவர் கண்டு கடற்படையினருக்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய மீட்பு நடவடிக்கையை உள்ளுர் மீனவரின் ஒத்துழைப்புடன் குறித்த படகு வாழைச்சேனை துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன மீனவர்களை கடற்படை அதிகாரிகள், மீன்பிடி திணைக்களம் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் படகுகள் சங்கம் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டதாக, நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.
காணாமல் போன மீனவர்கள் மீட்கப்பட்டு சொந்த இடங்களுக்கு வியாழக்கிழமை (13) இரவு அழைத்து வரப்பட்டுள்ளனர்.