கிளிநொச்சியை பிரதான தலைமையகமாக கொண்டு கடந்த 07 வருடங்களாக தாயகத்தில்
மனித நேய பணிகள் ஆற்றி வருகின்ற புதிய வாழ்வு தன்னார்வ நிறுவனத்தின்
பேராளர்கள் குழு அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று இரு நாட்கள் விஜயம்
மேற்கொண்டு வந்தது.
இந்த தன்னார்வ தொண்டர் நிறுவனத்தின் ஸ்தாபகரும்,
நிறைவேற்று இயக்குனருமான பிரித்தானியா வாழ் புனிதவதி நடனேஸ்வரன்
அம்மையாரின் அறிவுறுத்தலுக்கு அமைய கிளிநொச்சி தலைமையகத்தின் நிர்வாக
இயக்குனர் பா. பார்த்தீபனின் கண்காணிப்பில் இவ்விஜயம் இடம்பெற்றது.
புதிய வாழ்வு தன்னார்வ தொண்டர் நிறுவனத்தின் விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் பயனாளிகளாக கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசத்தின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாவட்டத்தை சேர்ந்த வீட்டு தோட்ட செய்கையாளர்கள் 150 பேர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் தலா 15,000 ரூபாய் பெறுமதியான இவ்வேலை திட்டத்தின் ஆரம்ப
நிகழ்வுகள் நேற்று காலை நற்பிட்ட்டிமுனையில் இடம்பெற்றது. இவற்றுக்கு சமசா
தலைவர் எஸ். லோகநாதன் தலைமை தாங்கினார்.
நிறுவனத்தின் நோக்கங்கள், வேலை
திட்டங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அதன் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரி
விஜயலாதன் எடுத்துரைத்தார். தமிழர் பிரதேசங்களில் போதை பொருள் பாவனை
திட்டமிடப்பட்ட வகைகளில் இளையோர்கள், பிள்ளைகள் மத்தியில் பரப்படுகின்றது,
இது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் செயற்படுவது அவசியம் என்றும் இவர்
தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு முதல் கட்ட நிதியாக தலா 5000 ரூபாய்
வழங்கி வைக்கப்பட்டது.