கதிரவன் கலைக்கழகம் பொன்விழா ஆண்டில் முன்னெடுக்கும் பல்வேறு நிகழ்வுகளின் அடிப்படையில் இவ்வாண்டின் 66 ஆவது நிகழ்வு ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றிய மட்டக்களப்பு பிராந்தியம் மற்றும் கண்ணகி கலை இலக்கிய கூடல் ஆகிய அமைப்புகளோடு இணைந்து ஆற்றலின் ஆற்றுகை பிரமாண்டமான கலை விழாவாக 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மட்/மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
ஆடல், பாடல், கவிதை, அபிநயம் மற்றும் கதாபிரசங்கம் என்று பல்வேறு நிகழ்வுகளின் ஆற்றுகையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து விருந்தினர்கள் பங்குபற்றியவை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத் தலைவர் மருத்துவ நிபுணர் சிவன் சுதன் தலைமையிலான வட மாகாணக் குழுவினர் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல பேராளர்கள் நிகழ்வின் சங்கமித்திருந்தனர்.
கலைஞர் கௌரவம், கலை நிகழ்வு வழங்கிய கலைஞர்களுக்கான பரிசளிப்பு, விருந்தினர்கள் பாராட்டு என பல்வேறு அம்சமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் வளர்ந்தோர் வரை குதூகலமாக நிகழ்வில் இணைந்திருந்தமை எல்லோர் மனங்களையும் கவரத்தக்கதாக இருந்தது.
மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்ற இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், வர்த்தக பிரமுகர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் முதலானோர் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.






































































































































