
EDITOR
30 மாணவிகள் அடங்கிய அணி தேசிய ரீதியில் சாதனை – சிறந்த அணித்தலைவிக்கான விருதையும் தட்டிச் சென்றார் செல்வி எஸ். அஷாங்கினி
தேசிய மட்ட உடற்பயிற்சிக் கண்காட்சிப் போட்டி 2026 இல் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கங்களை வெற்றிகொண்ட மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள், பாடசாலை மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய மட்ட உடற்பயிற்சிக் கண்காட்சிப் போட்டிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 27, 28ஆம் திகதிகளில் கண்டி திகன விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 30 மாணவிகள் அடங்கிய அணி பங்குபற்றி முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதன்போது, வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை அணிக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சிறந்த அணித்தலைவிக்கான விருது அணியின் தலைவியான செல்வி எஸ். அஷாங்கினிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை விளையாட்டுத் துறையில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைப்பது புதிய விடயமல்ல. 1978ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற 100 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் இப்பாடசாலையின் மாணவியான திருமதி ரோகினி அன்டனி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிலும் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு தேசிய மட்ட உடற்பயிற்சிக் கண்காட்சிப் போட்டியில் 30 மாணவிகளைக் கொண்ட அணி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளமை, பாடசாலையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
இச்சாதனைக்குப் பொறுப்பாசிரியராக திருமதி சுவீட்டா தர்ஷன் அவர்களும், பயிற்றுவிப்பாளராக திரு. K. புருசோத்தமன் அவர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர்.
இச்சாதனை மாணவிகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலையின் புதிய அதிபர் திருமதி அனோஜா ஜனார்த்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, சாதனை படைத்த 30 மாணவிகளுக்கும் அதிதிகள் மற்றும் பாடசாலை அதிபரினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக் கல்வி அதிகாரி திரு. T. கோகுலகுமரன் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு. V. மனோகரன் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திருமதி மிருணா அரவிந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், சாதனை படைத்த மாணவிகளின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவிகளைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்று மட்டக்களப்பு மண்ணுக்கும், தாம் கல்வி பயிலும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவிகளின் சாதனை, ஏனைய மாணவர்களுக்கும் சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது.


















































































