EDITOR
கிழக்கு மாகாணத்தின் ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய கலாநிதி ஜி. சுகுணன், இன்று (04) காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்தைத் தொடர்ந்து, புதிய பணிப்பாளர் கடமையேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் வைபவரீதியாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி, பேராசிரியர் வைத்திய கலாநிதி தி. திருக்குமரன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், புதிய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணனுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அத்துடன், கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதற்கு முன்னர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிய வைத்திய கலாநிதி ஜி. சுகுணன், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





































