அவுஸ்திரேலியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (18) சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் எதிர்கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியாவின் நவீன தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நன்றி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட கோரிக்கை
இச்சந்திப்பின் போது, 'அவுஸ்திரேலியா எய்ட்' (Australia Aid) ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் விசேட நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் காலங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான அபிவிருத்தி உதவிகளை வழங்குமாறு அவர் உயர்ஸ்தானிகரிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்துள்ளார்.





