சிவாச்சாரியார் டாக்டர் சிவஸ்ரீ. நா. சோமாஸ்கந்த குருக்களையா அவர்களுக்கு உயரிய குருபீடாதிபதி பொறுப்பு – ஆன்மீகச் சமூகத்தின் பெருமிதமும் பாராட்டும்.
சைவ சமயத்திற்கும், அந்தண சிவாச்சாரியார் சமூகத்திற்கும் புதிய வழிகாட்டலையும் உத்வேகத்தையும் அளிக்கும் சிறப்பான திருப்பம்
எமது மதிப்பிற்கும், போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய சிவாச்சாரியார் டாக்டர் நாவண்ணா சோமாஸ்கந்த குருக்களையா அவர்கள், இறையருளும் திருவருளும் கைகூடி இந்து சமயத்தின் உயரிய பொறுப்பான குருபீடாதிபதி பதவியை ஏற்றிருப்பது, ஆன்மீகச் சமூகத்திற்கும், அந்தண சிவாச்சாரியார் சமூகத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கும் நிகழ்வாகும்.
அவரது ஆன்மீகத் தகுதி, கல்விச் சிறப்பு, ஆளுமை, பண்புநலம், சமயப் பற்றுறுதி, தலைமைத்துவ ஆற்றல் மற்றும் நீண்டகால சமயப் பணிகளை மதிப்பீடு செய்து, சர்வதேச இந்து குருமார் அமைப்பின் ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் விளங்கும் வித்வத் சபையினர், அவருக்கு இம்மகிமை மிக்க உயரிய பொறுப்பினை வழங்குவதற்கு வழிவகுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
சிவாச்சாரியார் டாக்டர் நாவண்ணா சோமாஸ்கந்த குருக்களையா அவர்களின் சமயப் பணி, சமூகப் பணி, கல்விப் பணி எனப் பல்வேறு துறைகளிலும் ஆற்றிவரும் நற்பணிகள் சிறந்து விளங்கி, பல திசைகளிலும் விரிவடைந்து வருகின்றன என்றால் அது மிகையாகாது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆலயக் கும்பாபிஷேகங்கள், சமய நிகழ்வுகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் சமூக, சமய நிகழ்வுகள் எனப் பலவற்றிலும் பங்கேற்று, தமது அனுபவத்தையும் ஆன்மீக அறிவையும் பகிர்ந்து வருகின்ற அனுபவமிக்க ஆன்மீகப் பெரியாராக அவர் விளங்குகின்றார்.
அவரது ஆரம்பகால ஆன்மீகப் பயணத்திலிருந்தே நல்லை ஆதீனத்துடனான தொடர்பும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. எமது சைவ மரபின் பெருமைக்குரிய நல்லை ஆதீனத்தில், முதலாவது குருமஹா சன்னிதானம், மணிஐயா, மணி வாகவதர் சுவாமிகள் என அன்பாக அழைக்கும் . ஆதீனப் பீடாரோஹணம் செய்து, நல்லை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று, ஆன்மீக மற்றும் சமயப் பணிகளைச் சிறப்புற முன்னெடுப்பதற்கு உறுதுணையாகவும், உற்ற துணையாகவும், உயரிய வழிகாட்டியாகவும் விளங்கியவர் எமது சோமாஸ்கந்த குருக்களையா அவர்கள் என்பதனைப் பலரும் நன்கு அறிந்துள்ளனர். அறியாதவர்களுக்கும் இவ்விடயம் எடுத்துரைக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும்.
நல்லை ஆதீனத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் அதன் சமயப் பணிகளையும் முன்னெடுப்பதில் குருக்களையா அவர்களின் பங்களிப்பும் வகிபாகமும் மிகவும் போற்றுதலுக்குரியதாகும். ஆதீனத்துடனான அவரது ஆன்மீக உறவும், அர்ப்பணிப்பும், ஆதீனப் பணிகளுக்கு அவர் வழங்கிய ஆதரவும் மதிப்புடன் நினைவுகூரப்பட வேண்டியவை. இந்த உயரிய பங்களிப்பையும் அவரது சமயத் தொண்டின் ஒரு முக்கிய அங்கமாக இச்சிறப்பான தருணத்தில் அன்புடன் நினைவுகூர்ந்து பாராட்டுகின்றோம்.
சர்வதேச இந்து மத குருபீடமானது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் பல ஆன்மீகப் பெரியோர்களாலும், அந்தண சிவாச்சாரியார்களாலும் வழிநடத்தப்பட்டு, சமய மற்றும் சமூகப் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் சவால்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதிலும், அந்தணர் சமூகத்தின் ஒற்றுமை, உயர்வு, நலன் மற்றும் சமய மரபுகளின் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளமை அதன் வரலாற்றுப் பெருமையாகும்.
குறிப்பாக, யுத்தகாலச் சூழ்நிலைகளிலும் சர்வதேச இந்து மத குருபீடத்தின் பங்களிப்பும் வகிபாகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டங்களிலும் சமயப் பணிகள், ஆன்மீக வழிகாட்டல்கள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பில் இவ்வமைப்பு தனக்குரிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. இவ்வாறான வரலாற்றுப் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட அமைப்பிற்கு வலுவான தலைமைத்துவமும் வழிகாட்டலும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
இன்றைய காலகட்டத்தில் சைவ சமயத்திற்கு ஒரு தலைமைப்பீடம் உண்டா? தலைமைத்துவம் உண்டா? தலைவர் யார்? எனப் பல்வேறு கேள்விகள் சமூகத்தில் எழுப்பப்படுகின்றன. இக்கேள்விகளுக்கான தெளிவான பதில் எம்மிடம் உண்டு. சைவ சமயத்தவர்களாகிய எமக்கு தலைவரும் உண்டு, தலைமைத்துவமும் உண்டு. அன்பே உருவான பரம்பொருளாகிய ஏகபரம்பொருள் சிவபெருமானே எமது அனைவருக்கும் முதன்மையான தலைவரும் வழிகாட்டியும் ஆவார்.
ஆயினும், இறைவனின் திருவருளால் எமக்கு ஆன்மீக வழிகாட்டிகளாகவும், சமய ஆலோசகர்களாகவும், குருமார்களாகவும் பெரியோர்கள் அமையப்பெறுவது இறைவனது அருட்கொடையாகும். அந்த வகையில், சைவ சமயத்தவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கக்கூடிய உயரிய பண்பும், ஆன்மீகத் தகுதியும், போற்றுதலுக்குரிய ஆளுமையும் கொண்ட குருபீடாதிபதியாக சிவாச்சாரியார் டாக்டர் சிவஸ்ரீ. நா. சோமாஸ்கந்த குருக்களையா அவர்கள் எமக்கு வாய்க்கப்பெற்றிருப்பது இறையருளின் பெரும் பேறாகும்.
இலங்கையில் வாழும் அந்தண சிவாச்சாரியார்களுக்கு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும், ஆன்மீகத் தலைவராகவும் குருக்களையா அவர்கள் பொறுப்பேற்றிருப்பது, சமயப் பணிகளின் தொடர்ச்சிக்கும், எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வழிகாட்டலின் கீழ் சைவ சமயமும், அந்தண சிவாச்சாரியார்களின் சமய, ஆன்மீகப் பணிகளும் எதிர்காலத்தில் மேலும் சிறப்புற்று வளர்ச்சியடையும் என்பதில் நாம் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
அவரது வழிகாட்டல்களும், ஆலோசனைகளும், ஆன்மீக அறிவுரைகளும் சைவ சமயத்தவர்களுக்கும், அந்தண சிவாச்சாரியார்களுக்கும் தொடர்ந்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், அவற்றைப் பெற்று சமய மரபுகளையும் நெறிமுறைகளையும் பேணிப் பாதுகாத்து, ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் என்பதே எமது உள்ளார்ந்த விருப்பமும் நம்பிக்கையும் ஆகும்.
அவரது பதவியேற்பானது, எதிர்கால ஆன்மீக முன்னேற்றத்திற்கும், சமய மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும், இளைய தலைமுறை சிவாச்சாரியார்களை வழிநடத்துவதற்கும் ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும். அவரது தலைமையும் வழிகாட்டலும் சைவ சமயத்தின் வளர்ச்சிக்கும், அந்தண சிவாச்சாரியார்களின் ஒற்றுமைக்கும், சமயப் பணிகளின் மேம்பாட்டிற்கும் புதிய உத்வேகத்தையும் வலுவையும் அளிக்கும் என நம்புகின்றோம்.
அவரது தேக ஆரோக்கியம், நீண்ட ஆயுள், ஆன்மீகப் பணிகளின் மேன்மை மற்றும் தலைமைத்துவச் சிறப்பு ஆகியவற்றிற்காக அன்பே உருவான பரம்பொருளை மனமுருகிப் பிரார்த்திக்கின்றோம். அவரது வழிகாட்டலின் கீழ் இளைய தலைமுறையினராகிய நாம், சைவ சமயத்தையும் சிவாச்சாரியார் மரபுகளையும் மேலும் சிறப்புறப் பேணிப் பாதுகாத்து, சமயப் பணியில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பயணிக்கத் திருவருளும் குருவருளும் துணை நிற்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்.
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!
எமது மனமார்ந்த பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
சுபமங்களம்.
"சிவாகமகலாநிதி "
சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.
சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.





