உளசமூக ஆதரவு தொண்டர்கள் தனித்துவமான மனிதநேயப் பணியாளர்களாக உருவாக வேண்டும் – கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உமர் கதாப் முஹம்மத் அப்துல்லா














































அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உளசமூக ஆதரவு தொண்டர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, உளசமூக ஆதரவு அமைப்பின் (PSSS) தலைவி தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் தலைமையில்  (22.11.2026) சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் கௌரவ உமர் கதாப் முஹம்மத் அப்துல்லா உரையாற்றுகையில், கொழும்பு MIU பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் (IIPMS) தரமான உளவியல் கல்வி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு வாய்ப்புகளை சமூக நல நோக்குடன் வழங்கி வருவது பாராட்டத்தக்கது எனத் தெரிவித்தார்.

மேலும், உளசமூக ஆதரவு அமைப்பின் ஊடாக உருவாக்கப்படும் தொண்டர்கள் தனித்துவமான அடையாளத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் கொண்ட மனிதநேயப் பணியாளர்களாக உருவாக வேண்டும் என்றும், அதற்குத் தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் செயற்பாட்டு ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டதோடு அமைப்பின் தலைவி தேவரஞ்சினி பிரான்சிஸ், தேசிய மட்ட இணைப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக வலுவூட்டல் வளவாளரும், PSSS தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ், உளசமூக ஆதரவு சேவையானது மக்களின் உளநலத் தேவைகளைக் கண்டறிதல், அவர்களுக்குச் செவிசாய்த்தல், அடிப்படை உளசமூக ஆதரவை வழங்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் உரிய சேவைகளுக்குப் பரிந்துரைத்தல் ஆகிய மனிதநேயப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவித்தார்.

அத்துடன், மூன்று மாவட்டங்களிலும் நியமிக்கப்படும் தொண்டர்கள் தத்தமது பிரதேசங்களில் பொறுப்புணர்வுடனும், சேவை பெறுவோரின் இரகசியத்தன்மையைப் பேணியும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், தேசிய மட்ட இணைப்பாளர்கள் மற்றும் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த தொண்டர்களுக்கு அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.

“உளநிலையைக் காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்” என்ற நோக்குடன் உளசமூக ஆதரவு சேவையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தும் முயற்சியின் முக்கிய முன்னெடுப்பாக இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.