திராவிட இயக்கத்தின் தோற்றுவாய்- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி.




தேசிய விடுதலை இயக்கம் என்ற பெயரில், இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். பிரிட்டிஷ் இந்திய அரசின் நிர்வாகத்திலும், பணிகளிலும் பார்ப்பனர்களே நிரம்பி இருந்த காலம். இக் காலகட்டத்தில் நிலவிய சனாதன சங்கங்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்கும் பார்ப்பன ஏடுகளின் அச்சுறுத்தல்களும், அன்றைய சென்னை மாகாணத்தின் பார்ப்பனர் அல்லாதவருக்குக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. 

இந்நிலையில் டாக்டர் டி. எம். நாயர், பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசன் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் விளைவாகச் சென்னை வேப்பேரியில், 20.11.1916 அன்று பார்ப்பனரல்லாத தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இங்குதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) தோற்றம் பெற்றது. இதில் பார்ப்பனர் தவிர்ந்த அனைத்துச் சாதியினரும் கலந்து கொண்டனர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி. எம். நாயர், டாக்டர் நடேசன், ராவ்பகதூர் எம். சி. ராஜா, திரு ஜான் ரத்தினம், வரதராஜுலு நாயுடு, முத்தையா முதலியார் உள்ளிட்ட 26 தலைவர்கள் ஒன்று கூடி முடிவெடுத்து திரு. ராஜரத்தினம் முதலியார் தலைமையில் "தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்" என்ற அமைப்பினைத் தோற்றுவித்தனர். 

இவ்வமைப்பு, "திராவிட சங்கம்" அல்லது "பார்ப்பனர் அல்லாதார் சங்கம்" அல்லது "தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்" என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஆந்திரப் பிரகாசிகா (தெலுங்கு), திராவிடன் (தமிழ்), ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) என்னும் மூன்று பத்திரிகைகள் தொடங்கி நடத்தப் பட்டன. 

இவற்றில் ஆங்கிலப் பத்திரிகையான 'ஜஸ்டிஸ்' அந்நாளில் பிரபலமாகவே, இந்த இயக்கத்தின் பெயரும் ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் "ஜஸ்டிஸ் பார்ட்டி" என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் "நீதிக்கட்சி" என்று வழங்கலாயிற்று. தமிழில் வெளிவந்த பத்திரிகையான 'திராவிடன்' என்ற பெயரால் திராவிட இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.

திராவிட இயக்கங்களின் தோற்றுவாய் என்று கருதப்படும் "நீதிக்கட்சி" ஓர் அமைப்பாகத் தொடங்கப்பட்ட நாள், அதாவது, நீதிக்கட்சியின் 111 ஆவது பிறந்தநாள் இன்று (20.11.1916 - 20.11.2026).