உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய இணைப்பாளர் ஆர். ஷியாமளா வலியுறுத்தல்
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கௌரவ உமர் கதாப் அப்துல்லா அவர்களின் முன்னிலையில் அண்மையில் உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய இணைப்பாளர் நியமனத்தைப் பெற்றுக்கொண்ட ஆர். ஷியாமளா, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் எமது அமைப்பின் தொண்டர்கள் வெறுமனே சமூக சேவையாளர்களாக அன்றி, மக்களின் உண்மையான தேவைகளையும் உளசமூகப் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, உரிய பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் பெற்று அர்ப்பணிப்புடன் சமூக உணர்வுச் செயற்பாட்டாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய தன்னார்வத் தொண்டர்களின் சேவைகளை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளைச் சமூக நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்வர வேண்டும்.
தொண்டர்களின் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதுடன் நின்றுவிடாமல், அவர்களுக்கு உரிய அங்கீகாரம், பயிற்சி, வழிகாட்டல், ஆதரவு மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்குவது நிறுவனங்களின் சமூகப் பொறுப்பாகும் என அவர் மேலும் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் இடம்பெற்றாலும் சமூகப் பிரச்சினைகள் எதிர்பார்த்த அளவில் குறைவடையவில்லை. நிகழ்வுகளையும் உரைகளையும் நடத்துவது மட்டுமே உண்மையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது. மக்களின் சிந்தனை, மனப்பாங்கு மற்றும் நடத்தையில் நேர்மறையான மாற்றம் ஏற்படுவதே விழிப்புணர்வின் உண்மையான வெற்றியாகும்.
இதனைக் கருத்திற் கொண்டு, எமது உளசமூக ஆதரவு அமைப்பு தேசிய மட்டத்தில் இரண்டு பிரதான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
முதலாவது, பாடசாலைகள், கிராம மட்டங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஊடாக உளநலம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
இரண்டாவது, உளசமூக ஆதரவு தேவைப்படும் நபர்களையும் குடும்பங்களையும் அவர்களது வீடுகளுக்குச் சென்று சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து, குடும்ப உறுப்பினர்களிடையே உளநல மேம்பாடு, பரஸ்பரப் புரிந்துணர்வு மற்றும் ஆதரவான குடும்பச் சூழலை வளர்ப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதாகும்.
தேவையான சந்தர்ப்பங்களில் உரிய நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி மேலதிக ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதும் எமது நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், பல வருடங்களாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்த தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் செயற்பாடுகள் அவசியமாகும்.
ஆரம்பக் கட்டத்தில் எதிர்பார்த்த தேசிய மட்ட ஆதரவு கிடைக்காதபோதிலும், எதிர்காலத்தில் உரிய அங்கீகாரமும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எம்மால் இயன்ற வளங்களைக் கொண்டு இச்சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.
தன்னார்வத் தொண்டர்கள் என்பதற்காக நிறுவனங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் அவர்கள் மீது சுமத்துவது பொருத்தமானதல்ல. அவர்களின் சேவையை மதித்து உரிய ஆதரவும் செயற்பாட்டு வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்.
எமது அமைப்பின் நோக்கம் தொண்டர்களை உருவாக்குவது மட்டுமல்ல; அவர்களைச் சிறந்த சமூக உணர்வுச் செயற்பாட்டாளர்களாக வளர்த்து, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத் தலைமுறையினருக்கும் சிறந்த வழிகாட்டிகளாக உருவாக்குவதேயாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.





