வங்காள விரிகுடாவில் உருவான 'முரசு' புயல் மற்றும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 19 மாவட்டங்களைச் சேர்ந்த 147 பிரதேச செயலகப் பிரிவுகளில் 5,829 குடும்பங்களைச் சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் நேற்று (03) வரையான காலப்பகுதியில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். அத்துடன், 8 வீடுகள் முழுமையாகவும் 767 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மாவட்ட ரீதியாக இரத்தினபுரி மாவட்டமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், அங்கு 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக புத்தளம் மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பொல்கொல்ல மகாவலி அணையின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டு விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நாளந்தா நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும், கலா வாவியின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடிகள் வீதம் திறக்கப்பட்டு கலா ஓயாவிற்கு நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு கதவுகள் 3 அடிகள் வீதமும், 6 கதவுகள் 2 அடிகள் வீதமும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதால், தெதுரு ஓயாவின் கீழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது.
மழை காரணமாக வெல்லவ மற்றும் கணேவத்த இடையே தெதுரு ஓயா பெருக்கெடுத்ததால், வடக்கு புகையிரத மார்க்கத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. கொழும்பிலிருந்து சென்ற புகையிரதங்கள் குருநாகல் வரையும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த புகையிரதங்கள் மாஹோ வரையும் மட்டுப்படுத்தப்பட்டு, பயணிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மூலம் மாற்று வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. தற்போது வடக்கு மார்க்கத்தின் புகையிரதங்கள் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த 'முரசு' புயல் இந்தியாவின் ஆந்திரப் பகுதிக்குள் நகர்ந்துள்ள போதிலும், எதிர்வரும் நாட்களில் காலை வேளையில் பனிமூட்டமும், மாலையில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அத்துடன் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என்பதால், இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடல் பிராந்தியங்களில் பயணிக்கும் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.





