நவம்பர் 30 சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு! – தலைவர் சி. சசிதரன் அழைப்பு

 



ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை முழுமையாகத் தீர்ப்பதற்கும், எஞ்சியுள்ள சம்பள உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையான ஆதரவை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் சி. சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

1997ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவிவரும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருவதாகத் தெரிவித்துள்ள அவர், இப்போராட்டங்களின் விளைவாக சுபோதினி குழுவின் முன்மொழிவுகளில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டு, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நீண்டகாலமாக நிலவிவரும் சம்பள முரண்பாடுகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நியாயமான கோரிக்கையை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

– சி. சசிதரன்
தலைவர்,
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்