கல்லடி உப்போடை மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரி ‘விவேகா’ பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டமிடலும்.












































மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு நகரின் எழில்மிகு கல்லடி உப்போடை-நொச்சிமுனைப் பிரதேசத்தில், அன்னை பேச்சியம்மனின் திருவருட்கடாட்சத்துடன், கொடைவள்ளல்களான திரு. க. கதிர்காமத்தம்பி உடையார் மற்றும் திரு. தோ.கு.சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரின் உவந்தளிப்பில் கிடைத்த காணியில், 19.01.1909 அன்று நிறுவப்பட்ட பெருமைக்குரிய கல்வி நிலையமே மட்/மட் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி.

சமுதாயத்தில் பல கல்விமான்களையும் ஆளுமைகளையும் உருவாக்கிய பெருமைக்குரிய இக்கல்லூரியின் ‘விவேகா’ பழைய மாணவர் சங்கம், கடந்த பல ஆண்டுகளாகப் பாரிய வளர்ச்சியடைந்து, கல்லூரியின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணையாகவும் உறுதுணையாகவும் திகழ்ந்து வருகின்றது.

இவ்வளர்ச்சிப் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வாக, எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து, எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயிக்கும் நோக்கில், வருடாந்த ஒன்றுகூடலும் சிறப்பு அபிவிருத்தித் திட்டமிடல் நிகழ்வும் கல்லூரி அதிபரும் ‘விவேகா’ பழைய மாணவர் சங்கத் தலைவருமான திரு. S.தருமதாஸ் அவர்களின் தலைமையில், 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நொச்சிமுனை Treatoo Lake Resort இல் சிறப்பாக நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றல் மற்றும் கல்லூரி கீதத்துடன் இனிதே ஆரம்பமான இந்நிகழ்வினை, பழைய மாணவர் சங்கச் செயலாளர் திருமதி ந.சுரேனிகா மற்றும் உப செயலாளர் திரு. ஜெ.சாய்ராஜன் ஆகியோர் இணைந்து சிறப்பாக வழிநடத்தினர். நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இந்நிகழ்வில், பழைய மாணவர் சங்க ஆலோசகர் திருமதி தி.ஹரிதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், கல்லூரியில் தற்போது நிலவும் குறைபாடுகள், அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அடையாளம் காணப்பட்டன. அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில், பழைய மாணவர் சங்கத்தினால் எதிர்வரும் ஐந்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இக்கலந்துரையாடல்களின் பயனாக, கல்லூரியின் கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பாடவிதானத் துறைகளின் முழுமையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, விரிவான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டம் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் ஆளுமை மேம்பாட்டிற்கும் வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் எதிர்காலத்திலும் அக்கறை கொண்டு, இவ்வுயரிய முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவருக்கும் சங்கச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
‘விழுதுகள் கூடி வலிமை சேர்ப்போம்’ என்ற மகுட வாசகத்துடன், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்த உறுதியை வெளிப்படுத்திய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.