சர்வதேச பொறியியல் ஆராய்ச்சி மாநாடு 2026 கொழும்பில் ஆரம்பம்!

 



விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் (NERDC) ஏற்பாடு செய்துள்ள சர்வதேச பொறியியல் ஆராய்ச்சி மாநாடு – 2026, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் நேற்று (18) கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் ஆரம்பமானது.
“Smart Engineering for a Sustainable Future” (நிலையான எதிர்காலத்திற்கான ஸ்மார்ட் பொறியியல்) என்ற தொனிப்பொருளில் நான்காவது முறையாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பொறியியல் துறையில் பல்வேறு புத்தாக்கங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் (NERDC) விளங்குகின்றது.
இந்நிகழ்வில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் டாக்டர் ரோஷனி திசாநாயக்க, NERDC தலைவர் டாக்டர் சித்ரால் அம்பவத்த, பதில் பணிப்பாளர் நாயகம் மனோஜ் கருணாரத்ன, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பி.எம்.சி. திலகரத்ன, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) பிரதி உபவேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், பொறியியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளுடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலரும் மாநாட்டில் பங்கேற்றனர்.