வருமான வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்க 14 நாட்கள் சலுகைக் காலம்

 


2025/2026 வரி மதிப்பாண்டிற்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை நாளைய தினத்துக்குள் சமர்ப்பிக்க முடியாத வரி செலுத்துவோருக்கு, 14 நாட்கள் சலுகைக் காலம் வழங்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025/2026 வரி மதிப்பாண்டிற்கான வருமான வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்றுடன் நிறைவடைகின்றது. இருப்பினும், குறித்த இறுதித் திகதிக்குள் தமது விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் வரி செலுத்துவோருக்கு, அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு மேலதிகமாக 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

ஆண்டு வருமானம் 1.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ள தனிநபர்கள் மாத்திரமே தனிநபர் வருமான வரி செலுத்துவதற்கு பொறுப்பானவர்கள். எவ்வாறாயினும், இந்த வருமான எல்லையை விடக் குறைவான வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தால், தமது வருமானம் வரி அறவிடப்படும் எல்லையை விடக் குறைவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் பூச்சிய விபரத்திரட்டை (Nil Return) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

வரி விபரத்திரட்டுக்களைத் தாக்கல் செய்யும் நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. திணைக்களத்தின் இ-சேவைகள் இணையத்தளம் ஊடாக விபரத்திரட்டுக்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அத்துடன், சிரேஷ்ட பிரஜைகளுக்கு மாத்திரமே கைப்படப் பூர்த்தி செய்யப்பட்ட விபரத்திரட்டுக்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது பிராந்திய அலுவலகங்களில் சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் www.ird.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து இணையவழிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.