EDITOR
மட்டக்களப்பு புனித ஜோசப் கொன்வெண்ட் கீழ் இயங்கும் குழந்தை இயேசு முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா, பட்டமளிப்பு விழா மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு புனித செசிலியா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு குழந்தை இயேசு முன்பள்ளியின் அதிபர் அருட்சகோதரி மேரி ரூபினி A.C. தலைமை தாங்கினார்.
நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட இயேசு சபை அருட்தந்தையர்களின் மேலாளர் அருட்தந்தை T. சகாயநாதன் S.J. மற்றும் புனித செசிலியா மகளிர் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி மரியா வசந்தி A.C. ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயப் பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன், வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயப் பங்குத்தந்தை அருட்தந்தை A. ஜென்சன் லொயிட் மற்றும் புனித ஜோசப் கன்னியர் மடத்தின் மேலாளர் அருட்சகோதரி M. அருள்சீலி A.C. ஆகியோர் பங்கேற்றனர்.
இசைக்குழுவின் இசை முழக்கத்துடன் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், ஆசிரியர்களின் இறைவணக்கம், அறிமுக உரை மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளிலான வரவேற்புரைகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. UKG மாணவிகளின் வரவேற்பு நடனம், LKG சிறார்களின் வண்ணத்துப்பூச்சி நடனம், விசிறி நடனம், முறம் நடனம், மேற்கத்திய நடனம், கம்பு நடனம், மீனவர் நடனம், ஜோடி நடனம் மற்றும் மேடை இசைக்குழு நிகழ்ச்சி எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
அத்துடன், UKG மாணவர்களின் 'பொன்னான இதயம்' என்ற நாடகமும் மேடையேற்றப்பட்டது. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சிறார்கள் இணைந்து பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளும் விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக UKG மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு ஆண், பெண் மாணவர்களுக்கெனத் தனித்தனியாக நடைபெற்றது. மேலும், LKG மற்றும் UKG மாணவர்களுக்கான பரிசுகள், ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள், பேச்சாற்றல் சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
இதன்போது கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. பிரதம விருந்தினர் திருமதி அனுரேகா விவேகானந்தன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, முன்பள்ளியின் வருடாந்த அறிக்கையை திருமதி ஆசிரியை நிரோஷினி மற்றும் அருட்சகோதரி ரூபினி ஆகியோர் சமர்ப்பித்ததுடன், நன்றியுரையும் இடம்பெற்றது.
விழாவின் இறுதி நிகழ்வாக அனைத்து மாணவர்களும் இணைந்து வழங்கிய கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது.
மழலைச் செல்வங்களின் கலைத்திறன், ஆளுமை மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய இந்நிகழ்வு, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மகிழ்ச்சிகரமான நினைவுகளை ஏற்படுத்திய சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
























































































































