ஒருவருடைய வாழ்வில் மூன்று முக்கியமான பருவங்களை 13 வருட பாடசாலை காலத்திற்குள் கடப்பார்கள் .

 






(வி.ரி. சகாதேவராஜா)

அந்த மாணவர்களை அறிவு, திறன், மனப்பாங்கை வளர்த்து முழுமையாக உருவாக்க வேண்டும். இதனையே எமது கல்லூரியும் செய்கிறது

இவ்வாறு கிழக்கில் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் புதிய அதிபர் வண. பிதா. லெபோன் சுதன் தெரிவித்தார் .

கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் பிரதிநிதிகள் நேற்று அதிபர் பணிமனையில் அவரைச் சந்தித்தபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடக வலையமைப்பின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பிரதிநிதிகளான பி. கோகுலராஜன், கே சாந்தகுமார் ,பி சந்திரமோகன் ,என். சௌவியதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அங்கு அதிபர் மேலும் தெரிவிக்கையில்..

எம்மிடம் ஒப்படைக்கும் மாணவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி பாகுபாடும் இன்றி மனத்தூய்மையுடனும் சகோதரத்துவத்துடனும் நேர்மையாக உருவாக்குவோம்.

அதிபர்கள் மாறலாம் ஆசிரியர்கள் வரலாம் போகலாம், ஆனால் பற்றிமா கல்லூரி தாய் என்றும் நிலையாக இருக்கும். ஆகவே யார் செய்கின்ற உதவியாயினும் அது இந்த தாய்க்கு செய்யும் உதவியாகும்.

என்னைப் பொறுத்தவரையில் இங்கே முக்கியமானவர்கள் மாணவர்களே. அவர்களுக்காகத்தான் இத்தனை முயற்சியும் இத்தனை சேவைகளும்.
அடுத்தபடியாக பெற்றோர்கள் .
பிள்ளை வீட்டில் படிக்கும் சூழலை பெற்றோர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் .

நான் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பணியாற்றியவன். ஆனால் கல்முனையின் சூழல் சற்று வித்தியாசம். அதை விட பற்றிமாவை நேசிக்கின்ற பழைய மாணவர்கள் ஏராளம்.
பிரதியுபகாரங்கள் கருதாமல் தாய்க்கு தன்னலமற்ற சேவைகளை செய்கின்ற பல்லாயிரக்கணக்கானோர் இங்கு இருப்பது மகிழ்ச்சி.

எமது எண்ணங்கள் விரைவாகவும் செயற்பாடுகள் நேர்மையாகவும் இருக்கும் பட்சத்தில் ஆளுமையான பிள்ளைகளை இந்த சமூகத்தில் ஒப்படைக்கலாம் அதற்கு தங்களின் ஊடக ஒத்துழைப்பு கடந்த காலங்களைப் போல் இனியும் இருக்கும் என நம்புகிறேன். என்றார்.