இலங்கையின் மிக வயதான மனிதராகக் கருதப்படும் கரந்தெனியா, அங்குலுகல்லாவைச் சேர்ந்த பி.எச். மெனியால் தனது 111ஆவது வயதை எட்டியுள்ளார்.
1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி பிறந்த இவர், தனது 111ஆவது வயதிலும் சிறந்த மனநலம், கூர்மையான நினைவாற்றல் மற்றும் தெளிவான விழிப்புணர்வுடன் காணப்படுவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தேசிய முதியோர் செயலகத்தின் தகவலின்படி, அவர் மகிழ்ச்சியான மனநிலையுடனும் மனரீதியான சுறுசுறுப்புடனும் வாழ்ந்து வருவதுடன், குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் நிறைந்த பராமரிப்பையும் பெற்று வருகின்றார்.
ஐந்து மகன்களும் நான்கு மகள்களுமாக மொத்தம் ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட இவரது குடும்பத்தில், மூத்த பிள்ளை காலமான நிலையில் ஏனைய எட்டுப் பிள்ளைகளும் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், 92 பேரக்குழந்தைகளும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் இவரது குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளாக உள்ளனர்.
தந்தையின் முதுமைக் காலத்தில் அவருக்குத் தேவையான பராமரிப்பு, வசதிகள் மற்றும் சமூகத் தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவதில் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையின் மிக வயதான மனிதராகக் கருதப்படும் பி.எச். மெனியாலை கௌரவிக்கும் வகையில், தேசிய முதியோர் செயலகம் மற்றும் கரந்தெனியா பிரதேச செயலக அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (03) அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துப் பாராட்டியுள்ளனர்.
111 வயதிலும் நினைவாற்றலும் மனச் சுறுசுறுப்பும் கொண்டிருக்கும் பி.எச். மெனியாலின் வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வியப்பையும் முதியோரைப் போற்ற வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றது.





