இலங்கையின் மேசைப்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள இளம் உலகச் சம்பியன் தான் தாவி சமரவீர . மிகக் குறுகிய காலப்பகுதியில் சர்வதேச தரவரிசைப்படுத்தப்பட்ட மூன்று உலகத் தொடர்களில் பங்கேற்று, நான்கு தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்துள்ள இவரது சாதனைப் பயணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இளம் வயதிலேயே சர்வதேச அரங்கில் இலங்கைக்கான அடையாளத்தை அழுத்தமாகப் பதித்துள்ள தாவி சமரவீர, தனது அபாரத் திறமையினாலும் விடாமுயற்சியினாலும் இந்த மாபெரும் வெற்றிகளைத் தனதாக்கிக்கொண்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 21 முதல் 24 வரை இத்தாலியின் லிக்னானோ நகரில் நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தரவரிசைப் போட்டியில் தனது முதலாவது தங்கப் பதக்கத்தை வென்ற அவர், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 25 முதல் 28 வரை ஸ்லோவாக்கியாவின் செனெக் நகரில் நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோருக்கான தொடரிலும் மற்றுமொரு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அத்துடன் நின்றுவிடாமல், நவம்பர் 3 முதல் 7 வரை மொண்டெனீக்ரோவின் பொட்கோரிகா நகரில் நடைபெற்ற உலகத் தரவரிசைப் போட்டிகளில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மட்டுமன்றி, தன்னை விட வயதில் மூத்தவர்களுக்கான 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் களமிறங்கி இரண்டு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று இரட்டைச் சாதனை படைத்தார்.
தொடர்ச்சியாக மூன்று நாடுகளில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், உலக மேசைப்பந்து அரங்கில் இலங்கையின் நாமத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்ற பெருமை தாவி சமரவீரவைச் சாரும். இளம் வயதிலேயே இவ்வாறானதொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ள இவர், எதிர்காலத்தில் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கைக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத்தரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்





